கார்மேல் அன்னையின் வரலாறு
விவிலியத்தில் ஓரேபு மலை, சீனாய் மலை,தாபோர் மலை, கல்வாரி மலை என மலைகளுக்கென்று தனி தன்மையும் சிறப்பும் இருப்பது போன்று, கார்மேல் மலைக்கு என தனி சிறப்பு உண்டு. கார்மேல் என்றால் எபிரெய மொழியில் அழகான பூந்தோட்டம் என பொருள்படும். தனது பெயருக்கு ஏற்ப அழகிய தோட்டமாகவே கார்மேல் மலை திகழ்ந்துள்ளது என்பது இறைவாக்கினர், ஏசாயா நூலிலும் இனிமை மிகு பாடலும் சான்று பகர்கிறது. கார்மேல் மலைக்கு ஆழமான விவிலிய பின்னணி உண்டு. இறைவாக்கினர், எலியாவின் காலகட்டத்தில் கார்மல்மலை இறை வழிபாட்டின் தளமாக இயங்கி வந்தது. இறைவாக்கினர், எலியா பாகால் தெய்வத்தை வழிபட்டவர்களை தோற்கடித்தது இந்த கார்மல் மலையில்தான். இறைவாக்கினர், எலியா வானத்திலிருந்து நெருப்பை வரவழைத்து யாவே தான் உயிர் உள்ள தெய்வம் என்று மேய்ப்பித்து காட்டியதும் இந்த கார்மல் மழையில் தான். போலி இறைவாக்கினார்கள் 450 பேரையும் வாளுக்கு இரையாக்கி சமூகத்தில் நிலவி வந்த களைகளை அப்புறப்படுத்தியதும் இந்த கார்மல் மலையில்தான்.கடும் பஞ்சம் நிலவிய காலகட்டத்தில் மழை வரும் என்று எலியா முன்மொழிந்தது இந்த கார்மேல் மலையில் கண்ட காட்சியின் வழியாகத்தான். இவ்வாறு கார்மேல் மலை இறைபிரசன்னத்தின் அடையாளமாகவும் இறைவழிபாட்டின் தளமாகவும் இயங்கி வந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்மல் மலைக்கும் கார்மேல் அன்னைக்கும் என்ன தொடர்பு ? மரியன்னை எதற்காக கார்மல் அன்னை என்று அழைக்கப்படுகிறார்? அதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.
- கார்மேல் மலையில் இறைவாக்கினர் எலியா கண்ட காட்சி, மரியாவின் அமலோற்பவத்திற்கு முன்னடையாளமாகவும், கன்னியின் வயிற்றில் பிறக்க இருந்த மீட்பரின் வருகையை முன்கூட்டி அறிவிப்பதாகவும் அமைந்தது.
- இறைவாக்கினர் எலியாவின் காலம் முதல் திருமுழுக்கு யோவான் காலம் வரையில் கன்னியின் வயிற்றில் பிறக்க இருந்த மீட்பரின் வருகையை காத்திருந்த இறைவாக்கினார்கள் கார்மல் மலையில் தவம் செய்து காத்திருந்தார்கள்.
- கார்மல் மலையில் கிபி 1251ல் புனித சைமன் ஸ்டோக் என்ற கார்மல் சபை தலைமை துறவிக்கு மரியன்னை காட்சியில் தோன்றி கார்மல் அன்னையின் விழாவை கொண்டாடும் படி கேட்டுக்கொண்டார். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னையின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னைக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.அதனால் தான் மரியாள் கார்மேல் அன்னை என்று அழைக்கப்படுகிறாள்.
கார்மேல் மலையில் இறைவாக்கினர் எலியா கண்ட காட்சி: கடலிலிருந்து கையளவு மேகம் எழும்புவதை கண்டார். கடலிலிருந்து எழுந்த கையளவு மேகம் உவர்ப்பு நீரில் இருந்து உருவாகிறது.ஆனால் மேகத்தில் சேர்ந்திருந்த நீரில் உவர்ப்பு இருக்க வில்லை. அதேபோன்றுதான் மரியாள் மண்ணுலகத்தில் பிறந்தாலும் மனு குலத்தில் இருந்த ஜென்ம பாவம் அவரை தீண்ட முடியவில்லை. அவள் ஜென்ம பாவம் இன்றி அமலோற்பவியாக பிறந்தாள் என்பதன் அடையாளமாக தான் கடலில் இருந்து எழுந்த மேகம் மரியன்னையின் அமலோற்பவத்தை பறைசாற்றுகிறது என்று இறையியலாளர்கள் இந்த கருத்தை முன் வைக்கிறார்கள். இறைவாக்கினர் எலியாவும் அவர் காலகட்டத்தில் வாழ்ந்து இருந்த இறைவாக்கினர்களும் கன்னியின் வயிற்றில் பிறக்க இருந்த மீட்பரின் வருகைக்காக காத்திருந்தார்கள். அதற்கு இறைவாக்கினர் எலியா கார்மல் மலையில் கண்ட காட்சி அடிநாதமாக அமைந்துள்ளது என்று பல விவிலிய வரலாற்று ஆசிரியர்கள் இறையலாளர்களின் கருத்துக்கு வலு சேர்க்கிறது. இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் கார்மேல் மலையில் காத்திருந்த இந்த துறவிகள் எலிசாவின் காலத்திலும் தொடர்ந்து தவ,ஜெபங்களில் ஈடுபட்டு வந்தார்கள். பின்னர் பல நூற்றாண்டுகளாக பயணித்த இறைவாக்கினர் குழுவும் இயேசுவின் காலகட்டத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இந்த கார்மேல் மலையில் நீடித்தது என துறவி யோவான் போவாஸ் என்பவரின் எழுத்துக்களும், திருத்தந்தையின் மடல்களும் ,வழிபாட்டு ஜெபங்களும் இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது. இந்த இறைவாக்கினார்கள் பெந்தேகோஸ்து பெருநாளின் போது தூய ஆவியை பெற்றுக்கொண்டு அவர்கள் கிறிஸ்துவத்தை தழுவினார்கள் என்றும் பின்னர் மீண்டும் கார்மேல் மலைக்கு திரும்பி சென்று இறைவாக்கினர் எலியா காட்சி கொடுத்த இடத்தில் அன்னை மரியாளுக்கு ஆலயம் எழுப்பினார்கள் என்றும் சில குறிப்புகள் சான்று பகர்கிறது. இவர்களின் தொடர்ச்சியாக தான் இன்றைய கார்மல் துறவிகள் திகழ்கிறார்கள். இறைவாக்கினர் எலியாவின் ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டு அன்னை மரியாளிடம் தன்னை அர்ப்பணித்து இறைபணி செய்து வருகிறார்கள். கிபி 1251 வருடம் அத்துதுறவிகளின் வரலாற்றில் திருப்புமுனை ஏற்பட்ட வருடம்.அச்சபையின் தலைமை துறவி சைமன் ஸ்டோக் முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அன்னை மரியாள் அவருக்கு தோன்றினாள். அவர் காட்சியில் தோன்றிய போது இயேசுவை ஒரு கரத்திலும் மற்றொரு கையில் துறவிகள் அணியக்கூடிய குறுந்தோள் அங்கியையும் ஏந்தி இருந்தாள். தலைமை துறவிக்கு குறுந்தோள் அங்கியை பரிசாக வழங்கிய அன்னை, கார்மல் சபை துறவிகள் அனைவரும் அதை அணியும் படி சொன்னாள். துறவிகள் தொடக்க காலத்தில் அணிந்திருந்த இந்த குறுந்தோள் அங்கி பிற்காலத்தில் இறை மக்களிடமும் போய் சேர்ந்தது. இறை மக்களிடம் சென்றபோது அவற்றின் பெயரும் அவற்றின் வடிவமும் மாறியது. இறை மக்கள் கழுத்தில் அணிவதற்கு வசதியாக அது உருவாக்கப்பட்டது. மரண வேளையில் மரியன்னயின் மைந்தர்களுக்கு அது உதவியதால் இன்னும் சிறப்பாக அணிந்திருக்கும் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்கு உதவுவதால் இது உத்தரியம் என பெயர் பெற்றது.
உத்தரியத்தின் சிறப்புகள்:- மரியன்னையின் தாயன்பு: உத்தரியம் என்பது கழுத்தில் அணியப்படும் சிறுதுணி. பாலன் இயேசுவை துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியது அன்னை மரியாளின் தாயன்பை வெளிப்படுத்துகிறது. அதேபோன்றுதான் மரியன்னையின் இந்த பரிசு மனு குலத்தின் மீதான தாயன்பை பறை சாற்றுகிறது.நிர்வாண கோலத்தில் இருப்பவரை துணி மறைத்து மானத்தை காப்பாற்றுவது போன்று ஆண்டவரின் அருள் இல்லாமல் நிர்வாணமாய் இருப்பவருக்கு அன்னையின் ஆடை இறையருளை தந்து மானம் காக்கிறது.
- அர்ப்பணம் :உத்தரியத்தை அணிந்திருப்பவர்கள் மரியன்னைக்கு தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்பதன் அடையாளமாக தான் அதை அணிந்திருக்கிறார்கள்.
- இயேசுவின் நுகம்: என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாய் உள்ளது என்று இயேசு அவரது நுகத்தை நம் மீது ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தார். அன்னை தந்த இந்த உத்தரியம் இயேசுவின் நுகமாக கருதப்படுகிறது. இயேசு வாக்களித்தது போன்று அது இளைப்பாறுதலையும் ஆசீரையும் தருகிறது.
- பாதுகாக்கும் கருவி: உத்தரியத்தை அணிந்திருப்பவரின் ஆன்மாவை மரியன்னை அழிய விடாமல் பாதுகாக்கின்றார். ஆகவே ஆன்மாவை காக்கும் கருவியாக இது திகழ்கிறது.
- விண்ணக ஆசீர்: கடவுள் நல்லதொரு தந்தையாக ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆடை ஒன்றை அணிவிக்கிறார்.நட்பின் அடையாளமாக யோனத்தான் தாவீதுக்கு ஆடை தந்தார். இறைவாக்கினர் எலிசா, எலியாவிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆடை வழியாக இருமடங்கு வல்லமையோடு செயல்பட ஆரம்பிக்கிறார்.அதேபோன்று மரியன்னையின் உத்தரியம் வழியாக தந்திருக்கிற இந்த ஆடை விண்ணக ஆசீரின் வாய்க்காலாக திகழ்கிறது.
அழகிய பூந்தோட்டம் என பெயர் பெற்ற கார்மல் மலையில் தோன்றிய மரியன்னை, பிள்ளைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் அழகழகான பூக்களால் பூக்களின் மணத்தால் நிரப்புகிறாள். பூக்களை தேடி செல்லும் தேனீக்களை போல நாமும் கார்மேல் அன்னையை தேடுவோம். அன்னையின் தோட்டத்தில் சுவையான கனிகளாக கனிகளை ருசித்து பறந்து விரிந்து வாழ்வு தரும் மர நிழலில் நித்தமும் இளைப்பாறுவோம். ஜூலை 16 கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் ஆகும்.
வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலயம் வரலாறு: பெல்ஜியம் மிஷனரிகள் கி. பி. 1721ஆண்டு வாவறை பகுதிக்கு வந்து மக்களுக்கு சேவை செய்தார்கள் என்றும், மக்கள் விசுவாச வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்றும் வரலாறு கூறுகின்றது. கிபி 1773-ல் கொல்லம் மறை மாவட்டத்தின் கீழ் வாவறை ஊரில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஆலயம் வேங்கோடு பங்குடன் இணைக்கப்பட்டது.கி.பி1912-ல் களியக்காவிளை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டது. கி.பி1914 ஆண்டு களியக்காவிளை பங்கு பணியாளராக செயல்பட்ட அருட்பணி இன்னசென்ட் என்பவர் வாவறை ஆலயத்திற்கு நிலம் வாங்க அன்றைய கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சீகர் அவர்களிடம் அனுமதி பெற்று நிலம் வாங்கியதாகவும், வாவறை பகுதியில் கிறிஸ்தவம் தழைக்க இவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.1924-ல் கொல்லம் மறை மாவட்டத்தால் வாவறை அங்கீகரிக்கப்பட்டது. 1930- ல் கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து கோட்டார் தனி மறை மாவட்டம் ஆனபின், கோட்டாறு மறை மாவட்டத்தின் முதல் ஆயர் காலம் சென்ற மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்களால் 1931 ஆம் ஆண்டு வாவறை தனி பங்காக அறிவிக்கப்பட்டது. துவக்க காலத்தில் அருட்பணி இன்னசென்ட் அடிகளார் அவர்களின் முயற்சியால் இன்று ஆலயத்தில் காணப்படும் மரத்தாலான கார்மல் அன்னை சொரூபம் பெல்ஜியத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. வாவறை பங்கின் முதல் பங்கு பணியாளராக நியமிக்கப்பட்ட அருட்பணி ஸ்டீபன் நசரேத் முயற்சியால் ஆலய மணி பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. கிளை பங்குகள்:-
பங்கு குடும்ப விவரங்கள் மற்றும் கணக்குகள் கணிணி மயமாக்கப்பட்டது.
-
இளைஞர்களின் சீரிய முயற்சியால் சிறுவர் பூங்காவானது ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு அருட்பணி ஆண்டனி சேவியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பங்குக்கு என தனி வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு திருவிழா திருப்பலிகளை நேரலை செய்யப்பட்டது.
-
கார்மல் அன்னை நிதி நிறுவனம் செயல்பட ஆரம்பித்தது
-
பல்நோக்கு மையத்திற்கான நிலம் அருட்பணி மரிய ராஜேந்திரன் அவர்களின் காலத்தில் வாங்கப்பட்டது.
-
அருட்பணி ஆரோக்கிய செல்லி ரோஸ் அவர்கள் ஆலயத்திற்கான கொடி மரத்தையும், புனித பெர்னதத்தின் திருப்பண்டத்தையும் பீடத்தில் வைத்து அர்ச்சிக்கப்பட்டது
-
அருட்தந்தை சேகர் மைக்கேல் அவர்களின் காலத்தில் பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
-
தொடர்ந்து 2009 ல் அருட்பணி. சேகர் மைக்கேல் அவர்கள் பொறுப்பேற்று, அவரது தீவிர முயற்சியால் நன்கொடைகள் அதிகமாக வசூலிக்கப்பட்டு, ஆலய கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு, 16-07-2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
-
2006 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. வின்சென்ட் ராஜ் அவர்களது முயற்சியால் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேற்கூரை வார்க்கப்பட்டு ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
-
2005 -ல் பொறுப்பேற்ற அருட்பணி மனோகியம் சேவியர் அவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கு மக்களை அதிகமாக்கினார்.
-
2004 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. அருளப்பன் பணிக்காலத்தில் ஆலயத்தில் மிகச்சிறந்த புதிய நற்கருணை பேழை வைக்கப்பட்டதுடன், மக்களை ஜெப வாழ்வில் ஈடுபடுத்தி வழி நடத்தினார்.
-
2003 ல் பொறுப்பேற்ற அருட்பணி S. வின்சென்ட் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு ஆலய கட்டுமான பணிக்கான நன்கொடை வசூலிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
-
அருட்பணி பத்றோஸ் பணிக்காலத்தில் கூட்டு குடிநீர் திட்டம் 15-08-1997 ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் ஆலயத்திற்கென்று வெளிஅரங்கம் கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இவரைத் தொடர்ந்து தற்காலிக பங்குப்பணியாளராக செயல்பட்ட அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்கள் பணிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
-
1980 ல் பங்குத்தந்தையான அருட்பணி J. G ஜேசுதாஸ் அவர்கள் பங்கு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த கார்மல் அன்னை மக்கள் முன்னேற்ற சங்கம் என்னும் அமைப்பை பதிவு செய்து, அதன் சார்பில் மவுண்ட் கார்மல் நெசவாளர் கூட்டுறவு சங்கம், தட்டச்சு மையம், பால் விற்பனை மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை ஆரம்பித்து செயல்பட வைத்தார்.
-
1978 ல் பொறுப்பேற்ற அருட்பணி அருட்பணி மார்ட்டின் S. அலங்காரம் அவர்கள் முயற்சியால் 1978- ல் உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
-
1974 -ல் பொறுப்பேற்ற அருட்பணி அத்னேசியஸ் E. ரெத்தினசுவாமி அவர்கள் கார்மல் சபை அருட்சகோதரிகளை வரவழைத்து 1975 -ல் அவர்களுக்காக சகாயமாதா அன்பு இல்லத்தை ஆரம்பித்தார்கள்.
-
பெல்ஜியம் நாட்டின் சமயப்பரப்பாளர்கள் (Missionaries) கி.பி 1721 ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் மறைப்பரப்பு பணி செய்ததின் பயனாக மக்கள் கிறிஸ்தவ மறையை தழுவியதாக வரலாறு கூறுகிறது.
-
1931ஆம் ஆண்டு காஞ்சாம்புறம், குழிவிளை, வாறுவிளை, புதுக்கோடு, கோனசேரி நடைக்காவு ஆகிய ஆலயங்கள் வாவறைபங்கின் கிளை பங்குகளாக செயல்பட்டு வந்தன. 1972-ல் காஞ்சாம்புறம் தனி பங்காக உயர்த்தப்பட்டு வாறுவிளையும் நடைக்காவும் அதனுடன் இணைக்கப்பட்டது. தற்போது குழிவிளை புதுக்கோடு, கோனசேரி ஆகியன கிளைப்பங்குகளாக இருந்து வருகிறது.
-
1930 -ல் கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டாறு மறை மாவட்டம் உதயமானபின், கோட்டாறு மறை மாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்களால் 1931 -ம் ஆண்டு வாவறை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
-
1912 -ல் களியக்காவிளை பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டது. 1914 ல் களியக்காவிளை பங்குத்தந்தை அருட்தந்தை இன்னோசென்ட் அவர்கள் வாவறை ஆலயத்திற்கு நிலம் வாங்க அன்றைய கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களிடம் அனுமதி பெற்று நிலம் வாங்கியதாகவும், இப்பகுதியில் கிறிஸ்தவம் வளர அருட்தந்தை அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
-
கிபி 1873 -ல் கொல்லம் மறை மாவட்டத்தின் கீழ் வாவறை ஊரில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஆலயம் வேங்கோடு பங்குடன் இணைக்கப்பட்டது.